search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கோர்ட்டு"

    பாகிஸ்தானில் ரூ.1,400 கோடி ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் குற்றவாளி என அந்நாட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. #ShahbazSharif #Pakistan #Corruption
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் (வயது 67). ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.

    இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவி வகித்தபோது, ஆசியானா வீட்டு வசதி திட்டத்தில், ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    அதேபோல் ரூ.400 கோடி மதிப்பிலான பஞ்சாப் சாப் சானி ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, மேற்கூறிய 2 ஊழல் புகார்கள் தொடர்பாக ஷாபாஸ் ஷெரீப் மீது அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை முகமை (லஞ்ச ஒழிப்பு போலீசார்) வழக்குப்பதிவு செய்தது.

    ஷாபாஸ் ஷெரீப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடமை கோர்ட்டில், ஆசியானா வீட்டு வசதி ஊழல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சையத் நஜாமுல் ஹாசன் வழக்கை விசாரித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். தேசிய பொறுப்புடைமை முகமை சார்பில் ஆஜரான வக்கீல் அலி ஜான்ஜூவா, ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றசாட்டுக்குரிய ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அப்போது ஷாபாஸ் ஷெரீப்பின் வக்கீல், தனது கட்சிக்காரருக்கு உடல் நிலை சரி இல்லாததால், அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும், எனவே தண்டனை அறிவிப்பை ஒரு வாரத்துக்கு தள்ளிப்போட வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். #ShahbazSharif #Pakistan #Corruption
    ×